இருந்ததனை இருந்தபடி இருந்துகாட்டும் முறையான மௌனத்தையே தமது இயல்பான இடையறா உபதேசமாகக் கொண்ட பகவான் ரமணர் தமது கருணையால் மொழி வடிவிலும் உபதேசங்களைத் தொகுத்து அருளியுள்ளார். இவ்வுபதேசங்கள் பண்டிதர் பாமரர் அனைவரும் அவரவர் ஆற்றலிற்கேற்பப் பயன்பெறுமாறு செய்யுளாகவும் உரைநடையாகவும் அமைந்துள்ளன. வடமொழியில் உள்ளனவும் தமது அனுபூதிக்கு ஒத்தனவுமான நூல்களைத் தமிழில் செய்யுளாகவும் உரைநடையாகவும் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இந்நூல்களின் தொகுப்பே 'ஸ்ரீ ரமண நூற்றிரட்டு' என்னும் பெயரில் பல பதிப்புக்களைக் கண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள ஊனினை உருக்கும் பக்திப் பனுவல்களும் உள்ளொளி பெருக்கும் ஞான நூல்களும் சாதகர்களுக்கு அரிய விருந்தாகும்.